ADDED : பிப் 16, 2024 06:41 AM

தென்காசியை சேர்ந்தவர்கள் ஆன்ட்ஸ்டன் 28, முகமது காசிம் 25. நாகர்கோவிலை சேர்ந்தவர் விஷ்ணு 26. கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மூவரும் தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலரில் வந்தனர். மதுஅருந்தி இருந்த மூவரும் ஓட்டலுக்காக வந்த இடத்தில் போலீசார் அவர்களை விசாரித்தனர். பின்னர் அவர்களுக்கு டூ வீலரை பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். போதையில் இருந்ததால் மூவரையும் தாக்கினர். போதையிலிருந்த ஆன்ட்ஸ்டன் டூவீலரை தரும்படி போலீசாரை திட்டியுள்ளார்.
ஆத்திரமற்ற ஆல்பா படை எனும் போலீஸ் குழுவினரில் நான்கு பேர் தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட்டில், ஆன்ட்ஸ்டனை தரையில் தள்ளி பூட்ஸ் கால்களால் சரமாரியாக மிதித்தனர். இதில் அவர் மிகுந்த பாதிப்படைந்தார். அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை அளித்து அனுப்பி விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க கோரி அவரது உறவினர்கள் முற்றுகையிட்டதால் அனுமதித்தனர்.
போலீசார் தாக்கும் காட்சியை பஸ்சிலிருந்து ஒருவர் எடுத்த வீடியோ வெளியானது. சம்பவம் குறித்து டி.எஸ்.பி., தலைமையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
பள்ளி மாணவரிடம் 'சில்மிஷம்'; தாளாளர் 'போக்சோ'வில் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதிகண்டிகையில் உள்ள ஜூப்ளி சி.பி.எஸ்.சி., அகாடமி தனியார் பள்ளியில், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுாரைச் சேர்ந்த பாதர் சகாயராஜ், 52, என்பவர் தாளாளராக உள்ளார்.
இப்பள்ளியில் 2ம் வகுப்பு பயிலும் 7 வயது மாணவருக்கு, சகாயராஜ் பாலியல் தொந்தரவு தந்துள்ளார். பள்ளி சிறுவனின் செயலில் மாற்றம் கண்ட பெற்றோர், இதுகுறித்து சிறுவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தாளாளர் சகாயராஜ் தன்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்து துன்புறுத்தி வருவதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மாணவரின் பெற்றோர் புகாரை விசாரித்த பெருநகர் போலீசார், பள்ளி தாளாளர் சகாயராஜை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு; 4 மாணவர்கள் கைது
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனுாரில் இமயம் கலை அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு கடந்த 14ம் தேதி, வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. அதில் நடந்த ஒத்திகையின் போது, அதே கல்லுாரியில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் பவித்ரன், 21, என்ற மாணவர், பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவரை, வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முகிலன் என்பவர் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பவித்ரன், இரவு, 7.30 மணிக்கு தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, இரு பைக்குகளில் வந்து, பெட்ரோல் குண்டுகளை கல்லுாரி கேட் மீதும், உள்ளேயும் வீசினார். இதில் யாரும் காயமடையவில்லை. எனினும், கல்லுாரி வாயில் சேதமடைந்தது. இதுகுறித்து கல்லுாரி நிர்வாகம் சார்பில் ஜம்புநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லுாரி மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய மாணவர் பவித்ரன், அதே கல்லுாரியில் பயிலும் அவரது நண்பர்கள் நால்வரை நேற்று கைது செய்தனர்.
மென்பொறியாளரை மிரட்டி ரூ.27.46 லட்சம் மோசடி
சென்னையை அருகே மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜசேகர், 26. இவர், சில நாட்களுக்கு முன், வேலுாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது, அவரது மொபைல் போனில் அழைத்த நபர், பிரபல கூரியர் நிறுவனத்தின் மும்பை கிளை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின் அவர், 'உங்களது பெயரில் ஒரு கூரியர் பார்சல் வந்துள்ளது. அதில், சட்டவிரோத போதைப் பொருட்கள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஏராளமாக உள்ளன. இது குறித்து, மும்பை போலீசார் விசாரிக்கின்றனர்' என்றார்.
மேலும் அவர், ராஜசேகருக்கு, ஸ்கைப் இணையதளம் ஒன்றின் லிங்கையும் அனுப்பி, அதில் இணைய கூறி உள்ளார். அப்போது, அந்த ஐ.டி.,யில் பேசிய மர்ம நபர், தன்னை மும்பை நகர போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தினார். அவர், 'நீங்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. உங்கள் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்' என, பயமுறுத்தும் வகையில் பேசி, ராஜசேகரின் வங்கி விபரங்களை பெற்றார்.
பின், ராஜசேகர் வங்கி கணக்கிலிருந்து, 27.46 லட்சம் ரூபாய், ஒரே நாளில் பல தவணைகளாக எடுக்கப்பட்டது. தாமதமாக அதை அறிந்த ராஜசேகர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொடுத்த புகாரின்படி, வேலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை பா.ஜ., நிர்வாகி வழிமறித்து படுகொலை
மதுரை மஸ்தான்பட்டி அருகே குறிஞ்சி ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், மாவட்ட பா.ஜ., செயலராக உள்ளார். வண்டியூர் பகுதியில் அரிசி மாவு மில் வைத்துள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மில்லில் இருந்து வண்டியூர் சங்கு நகர் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ரிங்ரோடு அருகே அவரை நான்கு பேர் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தனர். அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர்.
தீ விபத்து; 7 பேர் பலி
தலைநகர் டில்லியின் அலிபூரில் உள்ள தயாள்பூர் சந்தை பகுதியில் அமைந்துள்ள பெயின்ட் தொழிற்சாலையில், நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், நான்கு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கு முன், தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ரசாயனங்கள் காரணமாக, இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.