மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த திருடர்கள்; நெதர்லாந்தில் ஒலித்த அலாரத்தால் சிக்கினர்
மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த திருடர்கள்; நெதர்லாந்தில் ஒலித்த அலாரத்தால் சிக்கினர்
ADDED : ஏப் 08, 2025 04:52 AM

சென்னை: மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்து திருடிய இருவர், நெதர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்த வீட்டு உரிமையாளரின் மொபைல் போனில் ஒலித்த அலாரத்தால் வசமாக சிக்கினர்.
சென்னை,மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணன், 58. இவர், கடந்த 4ம் தேதி மனைவி கலாவுடன், வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டில் பணிபுரியும் மகனை பார்க்க சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை மேற்கு மாம்பலத்தில் பூட்டியிருக்கும் வீட்டில் யாரோ மோட்டார் போடுவதாக, நெதர்லாந்தில் உள்ள வெங்கட்ரமணனின் மொபைல் போனில் அலாரம் அடித்துள்ளது.
அதிர்ச்சியடைந்தவர், மொபைல் போன் வாயிலாக வீட்டில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கண்காணித்தார். அப்போது, வீட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பது உறுதியானது.
இது குறித்து, பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர் வெங்கட் சுப்ரமணியன் என்பவர் உதவியுடன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு, அசோக் நகர் ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்த திருடர்கள் இருவரும், வீட்டில் இருந்து தப்பித்து சென்று, பக்கத்து தெருவான பக்தவச்சலம் தெருவில் பதுங்கினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள், பல்லாவரத்தைச் சேர்ந்த கமலகண்ணன், 65, திருப்பத்துாரைச் சேர்ந்த ஆரி பிலிப், 57, என, தெரியவந்தது.
இருவரும், வெங்கட்ரமணனின் வீட்டில் இருந்து திருடிய, 6 சவரன் நகை, 1.50 கிலோ வெள்ளி, 27 டாலர் நோட்டுகள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இரண்டு சிறிய ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
வெங்கட்ரமணன் வீட்டின் எதிரே உள்ள ஆடிட்டிங் அலுவலகத்தின் பூட்டை உடைத்து, இருவரும் திருட முயன்று உள்ளனர்.
அங்கு 'லேப்டாப்'கள் மட்டுமே இருந்ததால், அங்கு திருடாமல் வெளியேறி, வெங்கட்ரமணன் வீட்டில் புகுந்து திருடியது தெரிய வந்தது.
அப்போது, போலீஸ் வருவதை அறிந்து, ஆரி பிலிப் என்பவர் சுற்றுச்சுவர் ஏறி குதித்தபோது, அங்கு இருந்த சிறிய கம்பி குத்தியதில், இடது கண் புருவத்தில் லேசான காயமடைந்தார். போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

