கல்வராயன் மலை மக்களுக்கு நான்கு வாரங்களில் பஸ் வசதி
கல்வராயன் மலை மக்களுக்கு நான்கு வாரங்களில் பஸ் வசதி
ADDED : செப் 21, 2024 01:13 AM
சென்னை:கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பஸ் வசதியை நான்கு வாரங்களில் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அடிப்படை வசதிகளை அந்த பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான பஸ் வசதிகள் குறித்து, விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து நிர்வாக இயக்குனர்கள் நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுஇருந்தனர்.
அதன்படி, நேற்று நீதிபதிகள் சுப்ரமணியம், செந்தில்குமார் அமர்வில், இரண்டு நிர்வாக இயக்குனர்களும் காணொளி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
சேலம் கோட்டம் சார்பில் இரண்டு மினி பஸ்களும், விழுப்புரம் கோட்டம் சார்பில் 10 பஸ்களும் இயக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, ''விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் போதுமான அளவில் இல்லை,'' என்றார்.
இதையடுத்து, லாபம் கருதாமல், கூடுதல் மினி பஸ்களை இயக்கவும், அப்போது தான் அந்தப் பகுதி மக்கள் பயனடைவர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கல்வராயன் மலைப்பகுதிக்கு தேவையான பஸ் வசதிகளை, நான்கு வாரங்களில் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.