ADDED : பிப் 22, 2024 02:48 AM

சென்னை:போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சை, விரைவில் துவங்குமாறு, அரசுக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று, தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில், 6-ம் கட்ட முத்தரப்பு பேச்சு நடந்தது.
இறுதியாக தொழிலாளர் தனி இணை ஆணையர் பேசும்போது, 'ஊதிய ஒப்பந்த பேச்சை, விரைவில் போக்குவரத்து நிர்வாகங்கள் துவங்க வேண்டும். 3,000 ரூபாய் இடைக்கால நிவாரணம் தொடர்பான தொழிற்சங்கங்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.
அடுத்தகட்ட பேச்சை, மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
துணை குழு அமைப்பு
போக்குவரத்து ஊழியர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சில், நிர்வாகம் தரப்பில் பங்கேற்க நிதித்துறைச் செயலர் உட்பட, 14 பேர் குழு அமைத்து, இம்மாதம் 6ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது, இந்த பேச்சு நடத்தும் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்யும் வகையில், நிதித்துறைச் செயலர், சென்னை மாநகரம், விரைவு, சேலம் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள், மாநகர போக்குவரத்துக் கழக தலைமை நிதி அலுவலர் ஆகிய ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.