விபத்தில் கால் இழந்த டிரைவருக்கு இழப்பீடு வழங்காததால் பஸ்கள் ஜப்தி
விபத்தில் கால் இழந்த டிரைவருக்கு இழப்பீடு வழங்காததால் பஸ்கள் ஜப்தி
ADDED : ஏப் 02, 2025 08:05 AM

கோவை: விபத்தில் வலது கால் இழந்த டிரைவருக்கு, அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், இரண்டு புதிய பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
கோவை, ஆலாந்துறை அருகேயுள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் பகவதி,30; லாரி டிரைவர். இவர், 2020, ஜன., 31ல், அங்குள்ள ரோட்டில் பைக்கில் சென்ற போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி, காலில் முறிவு ஏற்பட்டது.
சிகிச்சை பலனளிக்காததால், காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஒரு கால் இல்லாத நிலையில், அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க கோரி, எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், பகவதிக்கு 28 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, 2023 ஜூன் 12ல் உத்தரவிட்டது. அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க தவறியதால், வக்கீல் பி.ரங்கராஜூ வாயிலாக, அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
வட்டியுடன் சேர்த்து, 31 லட்சம் ரூபாய் வழங்க கோரி, மனுதாக்கல் செய்தார். இதையடுத்து அரசு பஸ்சை, ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, ரயில்வே ஸ்டேஷன் - கணுவாய் செல்லும் (தடம் எண்:11) இரண்டு புதிய பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு, நேற்று கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. இதனால், இந்த பஸ்களை நம்பியிருந்த பொதுமக்கள், அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

