மின் இணைப்புக்கு ரூ.13,000 லஞ்சம்: வணிக ஆய்வாளர் கைது
மின் இணைப்புக்கு ரூ.13,000 லஞ்சம்: வணிக ஆய்வாளர் கைது
ADDED : ஜூலை 26, 2025 08:47 AM

செங்கல்பட்டு: தற்காலிக மின் இணைப்பு வழங்க, 13,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, ஊரப்பாக்கம் மின் வாரிய வணிக ஆய்வாளர் கைதானார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த ஆதனுாரில் வசிப்பவர் ராஜசேகர். இவர், புதிதாக கட்டும் வீட்டிற்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு, ஊரப்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தில், கடந்த மார்ச்சில் விண்ணப்பித்தார்.
நான்கு மாதங்கள் கடந்தும் மின் இணைப்பு கிடைக்காததால், மின் வாரிய வணிக ஆய்வாளர் ஏழுமலை, 56, என்பவரிடம், முறையிட்டுள்ளார். அவர், 'லஞ்சமாக 13,000 ரூபாய் கொடுத்தால், உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும்' என கூறியுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத ராஜசேகர், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 13,000 ரூபாயை எடுத்துச் சென்ற ராஜசேகர், ஏழுமலையிடம் நேற்று கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச பணம் வாங்கிய ஏழுமலையை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஏழுமலையை ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.