சென்னை கார் டிரைவர் கொலை வழக்கு தொழிலதிபர், அவரது மகன் விடுதலை
சென்னை கார் டிரைவர் கொலை வழக்கு தொழிலதிபர், அவரது மகன் விடுதலை
ADDED : ஜூன் 15, 2025 12:38 AM
சென்னை:மகளுடன் தகாத உறவில் இருந்ததாக எண்ணி, கார் டிரைவரின் ஆண் உறுப்பை அறுத்து கொலை செய்த வழக்கில், தொழிலதிபர், அவரது மகன் உட்பட, ஆறு பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஆர்.ஏ.புரம், பசுமை வழிச்சாலையை சேர்ந்தவர் பாபு என்ற ஹேமகுமார். மந்தைவெளியில் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியின், 'லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்தார். இவருடன் தாம்பரத்தை சேர்ந்த கண்ணனும் டிரைவராக இருந்தார். வாகனங்களை பராமரிப்பது, 'சர்வீஸ்' செய்வது போன்ற கூடுதல் பணிகளையும் கண்ணன் கவனித்து வந்தார்.
பின், முறைகேடு புகாரில் கண்ணன் பணி நீக்கம் செய்யப்பட்டார். தன் மீதான முறைகேடு குறித்து, உரிமையாளரிடம் பாபு புகார் கூறியதாக எண்ணி, அவரை பழிவாங்க கண்ணன் திட்டமிட்டார். கிருஷ்ணமூர்த்தியிடம், 'உங்கள் மகளுடன் திருமணத்தை மீறிய உறவில் பாபு இருக்கிறார்' என்று கண்ணன் பொய் கூறியுள்ளார்.
அவரின் பேச்சை உண்மை என நம்பி ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, தன் மகன் மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து, 2010 ஜூன், 30ல், பாபுவின் ஆண் உறுப்பை அறுத்து கொலை செய்தார்; உடலை கொடைக்கானலில் வீசினர்.
பாபுவின் தந்தை அளித்த புகாரில், கொடைக்கானலில் உடலை மீட்டு, கொலைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி, அவரின் மகன் பிரதீக் கிருஷ்ணமூர்த்தி, டிரைவர் கண்ணன், பல்லாவரத்தை சேர்ந்த விஜயகுமார், ஜான், வேளச்சேரியை சேர்ந்த செந்தில் ஆகியோரை அபிராமபுரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீக் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும், 14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்தாண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ணமூர்த்தி உட்பட ஆறு பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் தனக்கு எதிராக புகார் அளித்தது கிருஷ்ணமூர்த்தியின் மகள் என்பது தெரியாமல், பாபு தான் புகார் அளித்துள்ளார் என்று எண்ணி, அவரை பழிவாங்க கண்ணன் வதந்தி பரப்பியுள்ளார். வழக்கில் முக்கிய சாட்சியான கிருஷ்ணமூர்த்தியின் மகள், கொலையான பாபுவுக்கும், தனக்கும் இடையே தகாத உறவு இல்லை என, சாட்சியம் அளித்துள்ளார்.
வழக்கில் பல சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டாலும், இறந்தவருக்கு எதிராக குற்றவாளிகள் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் மற்றும் டிரைவர் கண்ணன் ஆகியோர் கொண்டிருந்த கொலைக்கான நோக்கத்தை பற்றி கூறவில்லை. கொலை நோக்கம் மற்றும் தொடர்பை நிரூபிக்க, ஒரு ஆதாரத்தை கூட அரசு தரப்பால் முன்வைக்க முடியவில்லை.
வழக்கை புலனாய்வு அதிகாரி அலட்சியமாக கையாண்டுள்ளார் என்பதற்கு, சிறந்த வழக்கு இது. எனவே, விசாரணை நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.