ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பா? வேளாங்கண்ணி மாதா சிலையை மாணவர்கள் சுமக்க வைத்த கல்வி நிறுவனம்: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பா? வேளாங்கண்ணி மாதா சிலையை மாணவர்கள் சுமக்க வைத்த கல்வி நிறுவனம்: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
ADDED : செப் 07, 2024 05:42 PM

சென்னை: கல்வி காவிமயமாகி விடக்கூடாது என்று கருத்து தெரிவிக்கும் எதிர்பாளர்கள் வேளாங்கண்ணி மாதா சிலையை , பாட வேளையில் மாணவர்களை தூக்கி சுமக்க வைத்த அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லூரி மீது என்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 4ம் தேதி அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அந்த சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ததுடன், தவறான சுற்றறிக்கையை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியது.
இதனைத் தொடர்ந்து, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை அளிக்கும் நோக்கத்தில் ' பள்ளி மேலாண்மை குழு' சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் உரை நிகழ்த்தினார். இந்த விவகாரம் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் ஆன்மிகம் சார்ந்து பேசுவதா என்றும் ஆசிரியர்கள், ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் சூடாக கருத்து தெரிவித்தனர். பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் ஆவேசமாக கருத்து வெளியிட்டார். இவ்விவகாரம் விவாதப் பொருளானது. இதனையடுத்து கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் எதையும் பள்ளிகளில் நடத்தக் கூடாது என, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அங்குசெட்டிபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று( செப்.,06), நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வேளாங்கண்ணி மாதாவை, படிக்க வந்த மாணவர்களை வைத்து தூக்கிக் கொண்டு கல்லூரி முழுக்க சுற்றி வந்தனர். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று தொழில்நுட்பக் கல்லூரிக்கு படிக்க வந்த ஹிந்து மாணவர்கள் அங்கே பணிபுரியும் ஆசிரியர்கள்,கல்லூரி நேரத்திலே வேளாங்கண்ணி மாதாவை தூக்கிக்கொண்டு கல்லூரி முழுக்க சுற்றி வருவது எந்த விதத்திலே நியாயம்?
பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த எந்த கருத்துக்களும் பேசக்கூடாது என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறுகிறார். விநாயகர் சதுர்த்தி விழா பள்ளிகளில் கொண்டாடக்கூடாது. ஆனால் அன்னை வேளாங்கண்ணியை தூக்கி சுமப்பது நியாயமா? இது மறைமுகமான மதமாற்றத்திற்கு தூண்டுதல் தானே. இந்த நிர்வாகத்தின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.
கல்வி காவிமயமாகி விடக்கூடாது என்று கருத்து தெரிவிக்கும் எதிர்பாளர்கள் வேளாங்கண்ணி தெய்வத்தை தூக்கி சுமக்கும் இந்த தொழில்நுட்பக் கல்லூரி மீது என்ன கருத்து சொல்லப் போகிறார்கள். எத்தனை ஊடகம் விவாதிக்கும் என்பதை பார்ப்போம். இதற்கு யாரும் பொங்க மாட்டார்களா? இது மதவாதம் இல்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.