ADDED : ஆக 21, 2011 01:52 AM
சென்னை : 'தமிழகத்தில் பயிர் சாகுபடியை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, ஜூலை 28ம் தேதி, தாமதமாக திறக்கப்பட்டதால், குறுவை நெல் சாகுபடிப் பரப்பில் குறைவு காணப்பட்டது.
நடப்பாண்டில், மேட்டூர் அணையில் தண்ணீர் போதுமான அளவு இருந்ததால், முதன்முறையாக ஜூன் 6ம் தேதி அணையினை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, முன்கூட்டியே குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்பதாலும், அறுவடை சமயத்தில் நெற்பயிருக்கு வடகிழக்கு பருவ மழையினால், அதிக பாதிப்பு ஏற்படாது என்பதாலும், உரிய காலத்தில் குறுவைப் பயிர் அறுவடை செய்யப்பட்டு விடும். பின், அதே பரப்பில் மீண்டும் சாகுபடியை மேற்கொள்ள முடியும். இதைக் கருத்தில் கொண்டு, அரசு எடுத்த முடிவு, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010 நவம்பர் மூன்று, நான்காம் வாரங்களில், பெய்த கனமழையினால், 26 மாவட்டங்களில், பயிர்கள் நீரில் மூழ்கின. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் அதிகளவு பாதிப்புக்குள்ளாகின.
இதனால், பல மாவட்டங்கள் குறிப்பாக, காவிரி பாசனப் பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில், ஆகஸ்டு மாதத்தில் சாகுபடி செய்ய வேண்டிய சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு, 50 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. சென்ற ஆண்டு, 60.50 லட்சம் எக்டேர், பயிர் சாகுபடி மற்றும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 46.40 லட்சம் எக்டேர் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. நடப்பாண்டில், 53.50 லட்சம் எக்டேர் பயிர் சாகுபடி மற்றும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைவதற்கான
வழிகள்: ஐந்து ஆண்டுகளில், 75 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாகவும், 50 சதவீதத்திற்கு அதிகமாக உற்பத்தித் திறனை உயர்த்தவும், பயிர் செய்யும் திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றவும், அனைத்து வேளாண் பணிகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளவும், திட்டப்பயன்கள் வேளாண் விவசாயிகளை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டமாக வேளாண் உற்பத்தியில் நிலைத்தன்மை அடைவதை உறுதி செய்வதற்கு, 2011-12, 2012-13 மற்றும் 2013 - 14ம் ஆண்டுகளுக்கான பண்ணை அளவிலான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.