இது உங்கள் இடம்: ஜனநாயகம் பற்றி காங்கிரஸ் பேசலாமா?
இது உங்கள் இடம்: ஜனநாயகம் பற்றி காங்கிரஸ் பேசலாமா?
ADDED : பிப் 01, 2024 03:29 AM

கே.மணிவண்ணன், நடுபாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் அளித்த பேட்டியில், 'வரும் தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது; ஜனநாயகத்தை காக்க, மக்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
* கடந்த, 1975ல் இந்திரா ஆட்சியில் எமர்ஜென்சியை கொண்டு வந்து, நாடு முழுதும் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, 90 முறை கலைத்தபோது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* தங்களுக்கு பிடிக்காத மாநில அரசுகளை கலைத்ததன் வாயிலாக சட்டசபைக்கும், பார்லிமென்ட்டுக்கும் ஒரே நேரத்தில் நடந்த தேர்தலுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதே... அப்போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* சீக்கிய பாதுகாப்பு வீரர்களால், இந்திரா சுடப்பட்டு இறந்த போது, நாடு முழுதும் கலவர தீயை மூட்டி, அப்பாவி சீக்கியர்கள், 3,000 பேரை கொன்று குவித்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* இலங்கையில் தம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* அதிகாரத்தை மத்தியில் குவித்து வைத்து, மாநிலங்களை கை ஏந்தும் பிச்சைக்காரர்களாக வைத்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* மிக சிறந்த பொருளாதார மேதையான மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த, 10 ஆண்டு காலமும், அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத போது, ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
இப்படி, நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காங்., ஆட்சியில் நடந்த பல ஜனநாயக விரோத செயல்களை பட்டியல் போட்டு கொண்டே சென்றால், பக்கங்கள் போதாது.ஆகவே, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய காங்கிரஸ் கட்சிக்கு, ஜனநாயகத்தை பற்றி பேச சிறிதும் தகுதியில்லை.