ஆன்லைன் பயிற்சியும், தேர்வும் ஒரே நேரத்தில் நடக்க முடியுமா?
ஆன்லைன் பயிற்சியும், தேர்வும் ஒரே நேரத்தில் நடக்க முடியுமா?
ADDED : நவ 24, 2025 12:27 AM
கோவை: நாள் முழுதும், ஆன்லைன் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்ற தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனரின் உத்தரவுக்கு கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுதும் இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இரு வாரம் வாழ்க்கை திறன் தேர்ச்சி பயிற்சி அளிக்க தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
இப்பயிற்சி மூலம் மாணவர்கள் அறிவு, திறன், மனப்பான்மை போன்றவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுதும் உள்ள பாலிடெக்னிக்களில், இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் டிச., 6ம் தேதி வரை ஆன்லைன் மூலம், நிபுணர் ஒருவரை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'மாணவர்களுக்கு எழுத்து தேர்வும், செய்முறை தேர்வும் டிச., 2ம் தேதி வரை நடத்த கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
'இந்நிலையில், நாள் முழுதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
'காலை, 8:30 முதல், மாலை 6:00 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளன. இதனால், மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவர். மாணவர்களுக்கு தேர்வு முடிந்த பின் இப்பயிற்சியை வழங்கலாம்' என்றனர்.

