'மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கலாமா?': இ.பி.எஸ்., கேள்வி
'மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கலாமா?': இ.பி.எஸ்., கேள்வி
ADDED : ஆக 11, 2024 05:41 PM

இடைப்பாடி: ''மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிப்பதை ஏற்க முடியாது,'' என, இடைப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., பேசினார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 68.85 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடம், சிறு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதேபோல் ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன் தொகுதி மேம்பாட்டு நிதியில், கான்கிரீட் சாலை போடப்பட்டது. மொத்தம், 72.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இடைப்பாடியில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது ஒட்டுமொத்தமாக சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தாராளமாக புழங்கும், 'போதை' பொருட்களை, மாணவர்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதை தடுக்க, பலமுறை அரசுக்கு தெரிவித்துவிட்டேன். சட்டசபையிலும் பேசிவிட்டேன். இந்த அரசு மெத்தனப்போக்காக உள்ளது. தலைநகரின் மையப்பகுதியில் மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், தலைமை செயலகம், துறைமுகம் உள்ளன. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டுமா என, இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.
எப்படி எல்லாம் நம் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிப்பதை ஏற்க முடியாது. சேலத்தில் சீர்மிகு நகர திட்டம் கொண்டு வந்தோம். அங்கு ஸ்டாலின், அவரது தந்தைக்கு சிலை வைத்து திறந்தார். சிலை வையுங்கள். திட்டங்களையும் நிறைவேற்றுங்கள். தமிழகத்தில் அரிசி விலை ஏறி கிலோ, 80 ரூபாய்க்கு விற்கிறது. இந்த ஆட்சி வந்த பின் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. வீட்டு வரியை, 100 சதவீதம் ஏற்றிவிட்டார்கள். குடிநீர் வரியும் உயர்த்தியாச்சு. வரி போடாதது என ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

