தீபாவளியை புறக்கணித்த கூட்டுறவு துறையால் பிரச்னையின்றி பொங்கல் பரிசை வழங்க முடியுமா?
தீபாவளியை புறக்கணித்த கூட்டுறவு துறையால் பிரச்னையின்றி பொங்கல் பரிசை வழங்க முடியுமா?
ADDED : அக் 25, 2025 12:53 AM
சென்னை: கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில், இந்த தீபாவளிக்கு சிறப்பு மளிகை தொகுப்பு விற்கப்படவில்லை. எனவே, ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளியை, கூட்டுறவு துறை புறக்கணித்து விட்டதாக பலரும் கருதுகின்றனர்.
கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு பண்டக சாலைகளும், கூட்டுறவு சங்கங்களும் பல்பொருள் அங்காடிகளை நடத்துகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு, கூட்டுறவு அங்காடிகளில், 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற பெயரில், தீபாவளி சிறப்பு மளிகை தொகுப்புகள் விற்கப்பட்டன.
இது தவிர, 'அதிரசம் - முறுக்கு காம்போ' பெயரில், பலகாரம் செய்வதற்கான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும் விற்கப்பட்டன. இவை, வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இதனால், பலரும் வாங்கினர்.
இந்த தீபாவளிக்கு, கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில், சிறப்பு மளிகை தொகுப்பு விற்கப்படவில்லை. இதனால், தீபாவளியை கூட்டுறவு துறை புறக்கணித்து விட்டதாக பலரும் கருதுகின்றனர்.
கூட்டுறவு பணியாளர்கள் கூறியதாவது:
கூட்டுறவு துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடி, மருந்தகம் போன்றவற்றில் வாரந்தோறும் ஆய்வு செய்து கருத்துகளை கேட்பர். அதற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவர். ஆனால், தற்போது உள்ள அதிகாரிகள் கள ஆய்விற்கு செல்வதில்லை.
கூட்டுறவு நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளர் மட்டுமே பணியாளர்கள், நுகர்வோர் நலன் தொடர்பான பணிகளை முன்னெடுக்கிறார்; அதற்கு ஒப்புதல் கிடைப்பதில்லை.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த தீபாவளிக்கு, சிறப்பு மளிகை தொகுப்பு சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதை விற்காததற்கு, உயரதிகாரிகளின் அலட்சியமே காரணம். சட்டசபை தேர்தலால், வரும் பொங்கலுக்கு, 5,000 ரூபாய் வரை ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
ஆய்விற்கு செல்லாத அதிகாரிகளை வைத்து கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பை பிரச்னையின்றி வழங்குவது சந்தேகம் தான். எனவே, அதிகாரிகள் கள ஆய்வுக்கு செல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

