உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறலாமா? கோர்ட்டில் ஆஜராக ஆணையருக்கு உத்தரவு!
உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறலாமா? கோர்ட்டில் ஆஜராக ஆணையருக்கு உத்தரவு!
ADDED : ஜூன் 27, 2024 04:58 AM

சென்னை: உயிருடன் உள்ள இலங்கை அகதி இறந்து விட்டதாக, அவரிடமே கடிதம் கொடுத்த அயலக தமிழர் நலத்துறை கமிஷனர், ஜூலை 16ல் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில், இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் உள்ளார். அவரை தங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு, தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையத்துக்கு, உறவினர்கள் கடிதம் கொடுத்து இருந்தனர்.
ஆனால், அவர் இறந்து விட்டதாக, அரசிடம் இருந்து அவருக்கே கடிதம் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, கிருஷ்ணகுமாரின் உறவினரான நாகேஸ்வரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகழேந்தி, ''மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு, நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுஇருந்தது. அதன்பின், இப்படியொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.
அப்போது நீதிபதிகள், 'உயிருடன் உள்ள நபர் இறந்து விட்டதாக எந்த அடிப்படையில் அறிக்கை கொடுக்கப்பட்டது?' என, கேள்வி எழுப்பினர்.
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், ''எங்களுக்கும் இது அதிர்ச்சியாகத் தான் உள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றார்.
இதையடுத்து, அயலக தமிழர் நலத் துறை கமிஷனர், வரும் ஜூலை 16ல் நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.