கடை மூடியபின் மது விற்றால் பார்களின் லைசன்ஸ் ரத்து
கடை மூடியபின் மது விற்றால் பார்களின் லைசன்ஸ் ரத்து
UPDATED : மார் 20, 2024 03:15 AM
ADDED : மார் 19, 2024 10:15 PM

சென்னை:'தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மதுக்கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்; போலீசில் புகார் அளித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மதுக்கூட உரிமையாளர்களை, 'டாஸ்மாக்' நிறுவனம் எச்சரித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 மதுக்கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. அவற்றில், 2,500க்கும் மேற்பட்ட கடைகளில் மதுக்கூடங்கள் உள்ளன. அவற்றில் தின்பண்டம், குளிர்பானம் விற்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், விதிகளை மீறி மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மதுக்கூட ஒப்பந்ததாரர்களுக்கு, டாஸ்மாக் மேலாளர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மதுக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அரசு அனுமதித்த விற்பனை நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் மதுக்கூடத்திற்குள் மது இருப்பு வைப்பதோ, மொத்த விற்பனை செய்வதோ கூடாது
மதுக்கூட ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் தலைமை அலுவலக செயல்முறை ஆணைப்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி, நடைமுறைப்படுத்த, அனைத்து மதுக்கூட ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது
விதிகளை மீறும் விதமாக சட்ட விரோத செயல்கள் கண்டறியப்பட்டால், மதுக்கூட ஒப்பந்ததாரர்கள் மீது போலீஸ் வாயிலாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கூட ஒப்பந்த உரிமம் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்படுவதுடன், காப்பு தொகை பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

