மீண்டும் ஷவர்மா பயங்கரம்; 5 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
மீண்டும் ஷவர்மா பயங்கரம்; 5 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
ADDED : அக் 14, 2024 02:08 PM

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஷவர்மா என்ற உணவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இரவு நேரங்களில், அதை நிறையப்பேர் கடைகளில் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதை தயார் செய்வதற்கு கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்படுவதாக நீண்ட காலமாக புகார் இருக்கிறது.
யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்குகின்றனர். கடைகள் சீல் வைக்கப்படுகின்றன. சிறிது காலத்துக்கு பிறகு மீண்டும் அதே புகார் எழுகிறது.
இந்நிலையில், இன்று(அக்.,14) புதுக்கோட்டையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த, 7 வயது சிறுவன் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். மீண்டும் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தியதாக புகார் கிளம்பியதால் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கடைக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.