'வங்கிகளுக்கான வழக்கறிஞர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட இயலாது'
'வங்கிகளுக்கான வழக்கறிஞர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட இயலாது'
ADDED : பிப் 04, 2024 02:07 AM
சென்னை: 'வங்கிகளுக்கான வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்கும் போது, இட ஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவிட இயலாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளுக்கான வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்கும் போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மாரிமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போதுள்ள நடைமுறையை மறுஆய்வு செய்து, புதிய விதிகள், நடைமுறையை வகுக்கவும், தகுதியை சமரசம் செய்து கொள்ளாமல் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர்கள், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
வங்கிகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு, வங்கி பணி விதிகள் பொருந்தாது. ஒவ்வொரு வங்கிக்கும் சொந்தமான நடைமுறை உள்ளது. அந்த நடைமுறையை கண்டிப்பாக வங்கிகள் பின்பற்ற வேண்டும்.
வங்கிக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையேயான உறவு என்பது, முதலாளி - தொழிலாளி உறவு அல்ல; அது, தொழில் ரீதியான உறவு.
தேர்வு செய்யப்படும் வழக்கறிஞர்கள் தகுதியானவராக, திறமையானவராக இருக்க வேண்டும். வழக்கறிஞர்களை ஈடுபடுத்தும் வங்கிகளுக்கு, அவர்களின் சேவையை முறித்துக் கொள்ளவும் உரிமை உள்ளது.
தனி நீதிபதியின் எதிர்பார்ப்பு பாராட்டுக்குரியது என்றாலும், ஆதிதிராவிட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும்படி உத்தரவு பிறப்பிப்பது, நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது.
எனவே, இட ஒதுக்கீடு வழங்கும்படி வங்கிகளுக்கு உத்தரவிட இயலாது.
தகுதியான, திறமையான வழக்கறிஞர்களை தேர்வு செய்ய, விரிவான நடைமுறையை வங்கிகள் பின்பற்றினால், அது பாராட்டுக்குரியதே. அதிக தகுதியுடைய வழக்கறிஞர்களை, வங்கிகள் தேர்வு செய்யும் என நாங்கள் நம்புகிறோம்.
ஏனென்றால், பொது மக்களின் பணத்துக்கு பாதுகாவலராக வங்கிகள் உள்ளன. தனி நீதிபதியின் உத்தரவு, தெரிவித்த கருத்து ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.