இரவு பயணத்தை தவிர்ப்பீர்: லாரி மீது கார் மோதல்: 6 பேர் பலி
இரவு பயணத்தை தவிர்ப்பீர்: லாரி மீது கார் மோதல்: 6 பேர் பலி
UPDATED : ஜன 29, 2024 08:29 PM
ADDED : ஜன 28, 2024 11:47 PM

தென்காசி : புளியங்குடி அருகே சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் சென்ற ஆறு பேர் பலியாயினர். நள்ளிரவில் இந்த பயணம் மேற்கொண்டதால் விபரீதம் நடந்துள்ளது. இரவு பயணத்தையும், அதிகாலை பயணத்தையும் தவிர்த்தால் விபத்து இல்லாமல் தப்பிக்கலாம் என்ற அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் இரவில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தெப்பத் திருவிழா நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் 24, என்பவருடன் காரில் குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர்.
கடையநல்லுார் கதிரேசன் என்பவருக்கு சொந்தமான காரை உறவினரான கார்த்திக் ஓட்டிச்சென்றார். அவருடன் புளியங்குடியை சேர்ந்த போத்திராஜ் 30, சுப்பிரமணியன் 27, முத்தமிழ்செல்வன் 27, முகேஷ் (எ) மனோ 19, வேல் மனோஜ் 24சென்றனர்.
அதிகாலை துயரம்
குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை 3:40 மணிக்கு புளியங்குடி அருகே காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். தென்காசி - - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கிலிபட்டி- புன்னையாபுரம் இடையே வந்தபோது கார், டிரைவர் கார்த்திக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதியது. சம்பவ இடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேரும் சிகிச்சைக்கு செல்லும் வழியில் ஒருவரும் என காரில் இருந்த மொத்தம் 6 பேரும் பலியாயினர்.
மீட்பு பணி
தென்காசி எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில் புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, வாசுதேவநல்லூர் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மண் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பலியான முத்தமிழ்செல்வன் திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அரச பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர். புளியங்குடியில் மனைவி புனிதா வீட்டிற்கு வந்திருந்தார். புனிதாவின் தம்பி முகேஷும் விபத்தில் பலியானார். இறந்தவர்கள் அனைவரும் கட்டட தொழிலாளிகள்.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.,ராஜா, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., சதன் திருமலை குமார் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். சிமென்ட் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அர்ச்சனாபுரத்தை சேர்ந்த பிரகாஷ் 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.