ADDED : பிப் 23, 2024 02:46 AM

தேவகோட்டை: சென்னை தொழிலதிபர் கார்த்திகேயனை கடத்தி கார், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். மூன்று கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
சென்னையில் செயல்படும் ஹிஜாவு நிதி நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன் ஏஜன்டாக செயல்படுகிறார். சென்னையில் வசித்து வரும் கார்த்திகேயன் நிறுவனத்திற்காக தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன், திலகவதி, திருமுகம், செல்வமணியிடம் ரூ.80 லட்சம் வசூலித்துள்ளார். நால்வரும் தங்கள் நண்பர்களிடம் சிறு தொகைகளாக வசூலித்து கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளனர். நிறுவனம் சில மாதங்களுக்கு மட்டுமே வட்டி வழங்கியது.
அதன் பின் வழங்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் பாலமுருகன் உள்ளிட்ட நால்வரிடம் பணம் கேட்டனர். இந்நிலையில் ஹிஜாவு நிறுவனம் தொடர்பான செய்திகள் வெளியானது. இதனால் நால்வரும் கார்த்திகேயனிடம் பணம் கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் அழைப்பின்பேரில் கார்த்திகேயன் தேவகோட்டை வந்தார். பாலமுருகனும் கார்த்திகேயனும் சேர்ந்து திருச்சி பாலகுரு மூலம் ஹிஜாவு நிறுவனத்தினரை மிரட்டி பணம் வசூலிக்க முடிவு செய்தனர்.
கடத்தி கார், பணம் கொள்ளை
இதற்காக தேவகோட்டை வந்த பாலகுரு கார்த்திகேயனிடம் பணம், நகை, சொத்து இருப்பதை அறிந்தார்.
கார்த்திகேயனை 2022 டிச.,24 தேவகோட்டை அருகே முள்ளிக்குண்டுக்கு பாலகுரு வரும்படி கூறினார். அங்கு வந்த அவரை பாலகுரு, நண்பர் பார்த்திபனுார் சிவபாலன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த நால்வர் துணையுடன் தாக்கி கடத்தினர். தஞ்சாவூர், திருச்சி மற்றும் சென்னை அழைத்து சென்று மிரட்டி அவரிடமிருந்த இரு கார்கள், பணம் மற்றும் சில ஆவணங்களை பறித்து சென்றனர்.
கார்த்திகேயன் ஆறாவயல் போலீசில் 2023 ஜன., 2 ல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை போலீசார் திருச்சி பாலகுருவை தேடினர்.
கார்த்திகேயன் கார் நிறத்தை மாற்றி அதில் பாலகுரு சுற்றி வருவது தெரிந்தது. அவரையும், அவர் கொடுத்த தகவலின்படி சிவபாலனையும் தனிப்படையினர் கைது செய்தனர். கூலிப்படையை சேர்ந்த நால்வரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து 3 கார்கள், நிதி நிறுவன ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.