டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் கடும் எதிர்ப்பு
டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் கடும் எதிர்ப்பு
UPDATED : மார் 21, 2024 04:06 PM
ADDED : மார் 21, 2024 01:31 PM

சென்னை: கர்நாடக சங்கீத வித்வான் டி.எம் கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு இசைக்கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்து உள்ளனர்.
சென்னையை சேர்ந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. மகசேசே விருது பெற்றவர். இந்திய அளவில் பிரபலமான டி.டி.கே., தொழில் குழும குடும்பத்தை சேர்ந்தவர்.
ஒவ்வொரு மாதமும் ஏசுநாதர் மற்றும் அல்லா குறித்து கர்நாடக இசையில் பாடல்களை வெளியிடுவேன் எனக் கூறியிருந்தார். கூத்து, பறையாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்து இருந்தார். அது முதல் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
விருதுக்கு தேர்வு

இந்நிலையில், சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும். ‛ சங்கீத கலாநிதி' விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். இதனால், இந்தாண்டு நடைபெறும் மியூசிக் அகாடமியின் 98வது ஆண்டு கூட்டத்திற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குவார்.
இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு
இதற்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பலரும் இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரஞ்சனி - காயத்ரி

பிரபல இசைக்கலைஞர் இசைக்கலைஞர்களான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‛‛மியூசிக் அகாடமியின் 2024ம் ஆண்டு கூட்டத்திலும், டிச.,25 ல் நடக்கும் இசை நிகழ்ச்சியிலும் இருந்து விலகிக் கொள்கிறோம். டி.எம்.கிருஷ்ணா தலைமையில் கூட்டம் நடப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசைக்கலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், வேண்டுமென்றே இசை சமூகத்தின் உணர்வுகளை மிதித்தவர். மரியாதைக்குரிய ஆளுமைகளான தியாகராஜர் மற்றும் எம்எஸ் சுப்புலட்சுமி ஆகியோரை அவமதித்தவர். கர்நாடக இசைக்கலைஞராக இருப்பது அவமானத்திற்குரியது என்ற உணர்வை பரப்ப முயன்றார். இசையில் ஆன்மிகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.
ஈ.வெ.ரா., போன்ற ஒருவரை டி.எம்.கிருஷ்ணா புகழ்ந்ததை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது.
ஈ.வெ.ரா., பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாக பிரகடனம் செய்தவர்.
இச்சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பல முறை கேவலமான மற்றும் தகாத வார்த்தைகளால் பேசியவர்.
கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், வேர்கள் மற்றும் கலாசாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பிற்குரிய அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இதனை புறக்கணித்துவிட்டு, இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டால், அது நாங்கள் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது ஆகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
விசாகா ஹரி

விசாகா ஹரி வெளியிட்ட அறிக்கையில்,கடவுள் அருளால், ‛உங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முக்கிய மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும்'' என்ற கொள்கையை பின்பற்றி வருகிறேன். ஆனால், சமீப காலங்களில் எனது கொள்கைகள் சில செயல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதால், இந்த முறை எனது கொள்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வானவர், முன்பு நிறைய சர்ச்சைக்கு உள்ளானவர். பலரின் உணர்வுகளை வேண்டுமென்றே பெரிதும் புண்படுத்தி உள்ளார். பல ஆண்டுகளாக மியூசிக் அகாடமியில் வழக்கமான உறுப்பினராக இல்லை. தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி போன்ற நம் இசை மும்மூர்த்திகளும் இசையை முக்கியம் என்ற நம்பியதை போல் நானும் நம்புகிறேன்.
மியூசிக் அகாடமியின் இந்த முடிவை, மறைந்த சங்கீத கலாநிதிகளான அரியக்குடி, செம்மங்குடி, பாலக்காடு மணி ஐயர் இன்று உயிருடன் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? தற்போது இருக்கும் சங்கீத கலாநிதிகள் கூட இந்த முடிவை ஏற்பார்களா? எனக்கூறியுள்ளார்.
திருச்சூர் சகோதரர்கள் ( கிருஷ்ண மோகன் மற்றும் ராம்குமார் மோகன்)

திருச்சூர் சகோதரர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை மியூசிக் அகாடமியின் 2024ம் ஆண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன். எங்களது நிகழ்ச்சி டிச.,19ல் நடைபெற இருந்தது. நமது நம்பிக்கைகள் மற்றும் முக்கிய மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானவற்றை டி.எம்.கிருஷ்ணா பரப்புகிறார். டிஎம் கிருஷ்ணா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றால், எங்கள் நம்பிக்கைகள் போலித்தனமானதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
துஷ்யந்த் ஸ்ரீதர்


தொடர்ந்து துஷ்யந்த் ஸ்ரீதர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ரஞ்சனி காயத்ரி ஆகியோருடன் கலந்துரையாடியதில், சனாதனத்தை மதிக்கும் இசைக்கலைஞர்களாக அவர்களை கண்டேன். அவர்களின் முடிவை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு பாராட்டுகள் எனக்கூறியுள்ளார்.
சித்ரவீணை ரவிக்கிரண்

சித்ரவீணை ரவிக்கிரண் வெளியிட்ட அறிக்கையில்,மியூசிக் அகாடமி வழங்கிய சங்கீத கலாநிதி விருதை திருப்பித்தர முடிவு செய்துள்ளேன். எதையும் விட கொள்கை முக்கியம் என்பதால், நன்கு பரிசீலனை செய்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். குழந்தைப் பருவத்தில் இருந்து எனக்கு ஆதரவு அளித்த அமைப்பிற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

