பா.ஜ.,வுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பா.ஜ.,வுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
UPDATED : மார் 20, 2024 01:41 PM
ADDED : மார் 20, 2024 01:19 PM

சென்னை: தாமரை சின்னத்தை பா.ஜ.,விற்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்திய நாட்டின் தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும் நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. மேலும் தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பா.ஜ.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” என சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய 20 ஆயிரம் ரூபாயில், 10 ஆயிரம் ரூபாயை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை மனுதாரர் திரும்பப் பெற அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

