ADDED : ஏப் 04, 2025 09:19 PM
சென்னை:அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், கடந்த 2008ல் சிலருக்கு, சென்னை திருவான்மியூரில் வீட்டு மனைகளை, அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலங்களை, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக, 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில், அப்போதைய வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி உள்ளிட்ட, ஏழு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பெரியசாமி தவிர, மற்ற அனைவருக்கு எதிரான வழக்குகளை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
பெரியசாமிக்கு எதிரான வழக்கு மட்டும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள பெரியசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.