'நீட்' தேர்வு சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராததை எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையில் முடிவு
'நீட்' தேர்வு சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராததை எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையில் முடிவு
ADDED : ஏப் 10, 2025 04:11 AM

சென்னை : 'நீட்' தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவுக்கு, மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்பட்டால் புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுப்பது என, முதல்வர் தலைமையில் நடந்த, சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்வதற்கு, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தி.மு.க., சார்பில் பரந்தாமன், எழிலன்; காங்கிரஸ் ராஜேஷ்குமார்; வி.சி.க.,- சிந்தனை செல்வன், பாலாஜி; இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன், மாரிமுத்து; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி, சின்னதுரை; ம.தி.மு.க.,- சதன் திருமலைகுமார், பூமிநாதன்; பா.ம.க., - ஜி.கே.மணி; ம.ம.க.,- ஜவாஹிருல்லா, அப்துல் சமது; த.வா.க.,- வேல்முருகன்; கொ.ம.தே.க.,- ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். அ.தி.மு.க.,- பா.ஜ., - புரட்சி பாரதம் கட்சியினர், கூட்டத்தை புறக்கணித்தனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும், 'நீட்' தேர்வை ஆரம்பத்தில் இருந்தே, தி.மு.க., எதிர்த்து வருகிறது.
நுழைவுத்தேர்வு என்பது ஏழை, கிராமப்புற விளிம்பு நிலை மாணவர்களை பாதிக்கக்கூடியது. அதை தவிர்த்து, பள்ளிக்கல்வித் திறனை மட்டுமே அடிப்படையாக வைத்து, கல்லுாரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும்.
ஆட்சி பொறுப்பேற்ற 2021ம் ஆண்டு முதலே. இதற்காக சட்டப் போராட்டத்தை துவங்கினோம். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து, அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்தோம்.
அக்குழு, 'சமுதாயத்தில் பின்தங்கியோரின் மருத்துவ கல்விக்கு இடையூறாகவும், சமூக, பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் உள்ளது' என தெரிவித்தது.
நீட் தேர்வு ரத்து சட்டத்தை, 2021 செப்., 13ம் தேதி நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு, கவர்னர் வாயிலாக அனுப்பி வைத்தோம். கவர்னர் உடனே ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
அதை செய்யாமல், அவர் அரசியல் செய்ய ஆரம்பித்தார். நாமும் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெற, கடுமையாக போராடினோம். இதையடுத்து, 2022 பிப்.,1, கவர்னர் திருப்பி அனுப்பினார்.
அந்த சட்ட முன்வடிவை, மீண்டும் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர் முயற்சிகளின் பலனாக, அந்த சட்ட முன்வடிவை, 2022 மே 4 கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, அனுப்பி வைத்தார்.
அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற, எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. மத்திய அரசு துறைகள் கேட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
அவற்றை ஏற்காமல், மத்திய அரசு நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதலை தர மறுத்துவிட்டது. மத்திய அரசு நம் கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம்.
ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான போராட்டம், எந்த வகையிலும் முடியவில்லை. நீட் தேர்வு என்பது விலக்க முடியாதது அல்ல. யாரோ சிலர் தங்களின் சுயநலனுக்காக, மத்திய அரசை தவறாக வழிநடத்தி நீட் தேர்வை நடத்துகின்றனர்.
சட்டப்போராட்டத்தை தொய்வில்லாமல், தொடர்ந்து நடத்தினால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
'நீட்' தேர்வு விலக்கு பெற, தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்த வேண்டும். சட்ட முன்வடிவுக்கு, மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்பட்டால் புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும்.
அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்ள வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை துணை முதல்வர் உதயநிதி முன்மொழிந்தார்.
அமைச்சர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.