அரசியல் விமர்சகர் மீதான வழக்கு 'மாஜி' அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
அரசியல் விமர்சகர் மீதான வழக்கு 'மாஜி' அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
ADDED : அக் 11, 2024 05:45 AM
திண்டிவனம்: அரசியல் விமர்சகர் மீதான வழக்கில், முன்னாள் அமைச்சர் சண்முகம் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜரானார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ரோஷணை போலீசில் புகார் அளித்தார். அதில், தான் ஜாதியை குறிப்பிட்டு பேசியதாக அவதுாறு பரப்பிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, யூ டியூப் பத்திரிகையாளர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
புகார் மீது ரோஷணை போலீசார் வழக்கு பதியாததால் திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சண்முகம் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், புகார் மீது நடவடிக்கை எடுத்து, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், ரோஷணை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாஜி அமைச்சர் சண்முகம் ஆஜரானார்.
அப்போது மனுதாரர் சண்முகம் தரப்பு வக்கீல், 'புகார் கொடுத்து பல மாதங்களாகியும் ரோஷணை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, புகார் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, பிற்பகலுக்குள் ரோஷணை போலீசார் தெரிவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் கமலா உத்தரவிட்டார்.
பிற்பகலில் ஆஜரான ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், 'புகார் கூறப்பட்ட ரவீந்திரன் துரைசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை' என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் ரோஷணை போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.