ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு; ஊழல் தடுப்பு நீதிமன்றம் மாற்றம்
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு; ஊழல் தடுப்பு நீதிமன்றம் மாற்றம்
ADDED : மே 20, 2025 01:14 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க. நிர்வாகி விஜய நல்லதம்பி ரூ.30 லட்சம் வாங்கி விட்டு ஏமாற்றியதாக 2021ல் குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் செய்தார். விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகியோர் மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி பணம் பெற்று தன்னை ஏமாற்றியதாக விஜய நல்லதம்பி கொடுத்த புகாரில் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் பாபுராஜ், நண்பர்கள் பலராமன், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மற்றொரு வழக்கும் குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகளில் 2022 ஜனவரி 5ல் கர்நாடக மாநிலத்தில் வைத்து ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2023 ஜனவரியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதிகா ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.
ஆனால் ராஜேந்திர பாலாஜி மீதான புகாரை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி வள்ளி மணவாளன் 2023 மார்ச் உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இவ்வழக்கில் கவர்னர் அனுமதி வழங்கிய நிலையில் ஏப்ரல் 15 இரவு ஆன்லைன் மூலம், இபைலிங் முறையில் 600 பக்கங்கள் கொண்ட 2 கூடுதல் குற்றப்பத்திரிகைகளை குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கு மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றமான முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு நேற்று மாற்றப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் வழக்கம் போல் நீதிமன்றங்கள் செயல்படும்போது இந்த வழக்கு, நம்பர் இடப்பட்டு விசாரணைக்கு வரும் என போலீசார் தெரிவித்தனர்.