சீமானுக்கு எதிரான வழக்கு: விரைவாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
சீமானுக்கு எதிரான வழக்கு: விரைவாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : நவ 28, 2024 07:00 PM

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் இந்திய மீனவர்கள் பலியானதை கண்டித்து சென்னையில் 2010ம் ஆண்டு சீமானின் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீது சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இவர் மீதான வழக்கு ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2018 ம் ஆண்டு சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் 13 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துவிட்டது. இதனால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.
சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' சாட்சிகள் விசாரணை துவங்கிவிட்டதால், தாங்கள் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுகிறோம்,'' என்றார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.