வானம் இடிந்துவிடாது; முக்கிய வழக்கில் 'குட்டு' வைத்த ஐகோர்ட்
வானம் இடிந்துவிடாது; முக்கிய வழக்கில் 'குட்டு' வைத்த ஐகோர்ட்
UPDATED : நவ 11, 2024 04:47 PM
ADDED : நவ 11, 2024 04:43 PM

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாஜி டி.ஜி.பி., சுனில்குமார் நிமயனத்தை எதிர்த்த வழக்கில், அவசர வழக்காக எடுக்காவிட்டால் வானம் இடிந்து விழாது என்று சென்னை ஐகோர்ட் விமர்சித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாஜி டி.ஜி.பி., சுனில்குமார் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நியமனத்தை எதிர்த்து அ.தி.மு.க., வக்கீல் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டது. அடுத்த விசாரணை நவம்பர் 11ம் தேதி நடக்கும் என்று கூறியது.
இந் நிலையில் இந்த வழக்கு, இன்று அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படவில்லை. இது குறித்து மனுதாரர் தரப்பில் நீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா என்று வினவிய கோர்ட், வழக்கை பட்டிலிடுவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்றது.
அதேநேரத்தில் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதை ஏற்காத கோர்ட், அரசின் கொள்கை முடிவில் எப்படி தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பியது.
பின்னர், வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழாது என்று கடுமையாக விமர்சித்தது. எல்லா நியமனங்களுக்கும் அரசியல்சாயம் பூசவேண்டாம் என்றும் கண்டித்தது.