பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கு; கண்காணிக்க பெண் போலீசார் நியமனம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கு; கண்காணிக்க பெண் போலீசார் நியமனம்
ADDED : டிச 29, 2025 05:29 AM

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை கண்காணிக்கவும், அதுதொடர்பான பணிகளை மேற்கொள்ளவும், ஒன்பது போலீஸ் நிலையங்களுக்கு ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: காவல் துறையில், ஐ.ஜி., தலைமையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு செயல் படுகிறது. இப்பிரிவுடன், 244 மகளிர் காவல் நிலையங்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, 'ஐ.யு.சி.ஏ.டபிள்யூ.,' எனும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவு, குழந்தை கள் கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தப்பிக்காமல் இருக்க, நீதிமன்றங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணிக்க, அதற்கு தேவையான ஆவணங்களை வழங்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஒன்பது போலீஸ் நிலையங்களுக்கு, ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர்களுக்கு, 'லேப்டாப்' மற்றும் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

