'ராட்வைலர்' நாயை ஏவி வயதான தம்பதியை கடிக்க செய்த உரிமையாளர் மீது வழக்கு
'ராட்வைலர்' நாயை ஏவி வயதான தம்பதியை கடிக்க செய்த உரிமையாளர் மீது வழக்கு
UPDATED : ஏப் 03, 2025 04:52 AM
ADDED : ஏப் 03, 2025 12:37 AM

புழல், புழல் அருகே புத்தகரம் ராஜம்மாள் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 72. இவரது மனைவி அன்னக்கிளி. கடந்த 31ம் தேதி நள்ளிரவு 11:30 மணியளவில், மாரியப்பன் வீட்டிற்கு வெளியே வரவும், அப்பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் கவியரசன், தான் வளர்க்கும் 'ராட்வைலர்' வகை நாயை, சங்கிலி கூட கட்டாமல் 'வாக்கிங்' அழைத்துச் சென்றுள்ளார்.
பயந்து போன மாரியப்பன், இது குறித்து கவியரசனிடம் தட்டிக்கேட்டுள்ளார். சத்தம் கேட்டு அன்னக்கிளியும் அங்கு வந்துள்ளார். ஆத்திரமடைந்த கவியரசன், மாரியப்பனை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் வயதான தம்பதி மீது நாய் கடிக்க பாய்ந்துள்ளது.
நாயை கவியரசன் தடுக்கவல்லை. வயதான தம்பதியை சுற்றி சுற்றி வந்து நாய் கடித்தது. மேலும், மாரியப்பனின் வேட்டியை இழுத்து அவரை அரை நிர்வாணமாக்கியது.
சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலரையும், நாய் துரத்தி சென்று கடித்தது. ஒரு வழியாக நாயிடம் இருந்து மீண்ட மாரியப்பன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இது குறித்து புழல் போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வயதான தம்பதியை நாய் கடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 41, என்பவரும், புழல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த புழல் போலீசார், தடை விதிக்கப்பட்டுள்ள ராட்வைலர் வகை நாயை, சங்கிலி மற்றும் முக கவசம் அணிவிக்காமல் வெளியே அழைத்து வந்தது குறித்து நடவடிக்கை எடுக்க, மாநகராட்சிக்கும் பரிந்துரைத்துள்ளனர்.