ADDED : அக் 17, 2024 09:39 PM
மதுரை:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை உப்பாற்று ஓடை முகத்துவாரத்திலிருந்து அகற்ற நடவடிக்கை கோரிய வழக்கில் அரசு தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி ராஜசேகர் சுப்பையா தாக்கல் செய்த பொதுநல மனு:
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் (தாமிரம்) உற்பத்தி செய்யப்பட்டது. காப்பர் கழிவுகள் துாத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புதுக்கேட்டை பாலம் அருகே உப்பாற்று ஓடை முகத்துவாரத்தில் நிலத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2015 கனமழையின்போது ஓடை வழியாக செல்ல வேண்டிய நீர், துாத்துக்குடிக்குள் புகுந்தது. வெள்ளத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் 2023 டிசம்பரில் பெய்த கனமழையின்போதும் பாதிப்பு ஏற்பட்டது.
மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை நிறுவனம் மீறியது. கழிவுகளை அகற்றவில்லை. அச்சுறுத்தலாக உள்ள காப்பர் கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துாத்துக்குடி கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மேலாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, கலெக்டரிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர், வரும் 23ல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.