UPDATED : ஜன 30, 2024 09:49 AM
ADDED : ஜன 30, 2024 02:17 AM

கோவை: கோவையை தலைமையிடமாக கொண்ட, 'மைவி3 ஆட்ஸ்' என்ற நிறுவனம், ஆன்லைனில் விளம்பரங்கள் பார்த்து 'லைக்' போடுவது மற்றும் பொருட்களை வாங்குவதன் வாயிலாக வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு தினமும், 100 - 600 ரூபாய் வரை, அவர்கள் பார்க்கும் விளம்பரத்திற்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்நிறுவனம் மோசடியான முறையில் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாக, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில், மாநகர சைபர் கிரைம் எஸ்.ஐ., புகார் அளித்துள்ளார்.
கூடுதல் தொகை
புகாரில் கூறியிருப்பதாவது:
'யூடியூபில் மைவி3 ஆட்ஸ் எம்.டி.,போர்ம்' என்ற சேனலில், மைவி3 ஆட்ஸ் என்ற விளம்பர வீடியோவில், தினசரி மொபைல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என, கூறப்பட்டிருந்தது.
அடிப்படை உறுப்பினராக சேர 360 ரூபாய், அடுத்தடுத்த சில்வர், கோல்டு, டைமண்டு என பிரித்து, அதில் உறுப்பினராக முறையே 3060 ரூபாய், 30,360 ரூபாய், 60,660 ரூபாய், கிரவுன் மெம்பர் ஆக 1 லட்சத்து 21,260 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், கூறப்பட்டிருந்தது.
செலுத்தும் தொகைகளுக்கு, ஆயுர்வேத கேப்ஸ்யூல்கள் வழங்கப்படும் எனவும், சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு கீழ், புது நபர்களை அறிமுகப்படுத்தினால், புரமோஷன் மற்றும் புதிதாக சேரும் நபர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, கூடுதல் தொகை மற்றும் சிறப்பு ரிவார்டு வழங்கப்படும் எனவும், விளம்பரத்தில் கூறப்பட்டு இருந்தது.
உறுப்பினராக சேர்ந்த உடன், தினமும் விளம்பரம் பார்த்தால் அதீத வருமானம் ஈட்டலாம் என்று, பொதுமக்களுக்கு பேராசையை துாண்டும் வண்ணம் விளம்பரம் இருந்தது.
தொகை செலுத்தி சேரும் நபர்கள், நிறுவனத்தின் விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக கூறுவதில், எந்தவித சாத்தியக்கூறும் இருப்பதாக தெரியவில்லை. இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு, எந்த அடிப்படையில் வருமானம் கொடுப்பர் என்ற எந்த ஒரு விபரமும் அவர்கள் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கவில்லை.
மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து கொடுப்பது சட்டத்திற்கு புறம்பானது. மக்களுக்கு ஆசை காட்டி, மருத்துவ துறையால் பரிந்துரைக்கபடாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத பொருட்களை, பொதுமக்களுக்கு கொடுப்பதாக விளம்பரப்படுத்தி உள்ளனர்.
பொதுமக்களை ஏமாற்றி, பெரும் தொகையை வசூலித்துக் கொண்டிருக்கும் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துஇருந்தார்.
மாநகர குற்றப்பிரிவு போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனம் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.