மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு: ஐகோர்ட் ஒத்திவைப்பு
மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு: ஐகோர்ட் ஒத்திவைப்பு
ADDED : நவ 27, 2025 09:12 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உபகோயில்கள் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்போது கோயில் தரப்பு: மீனாட்சி அம்மன், உபகோயில்களுக்கு சொந்தமாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 1233.98 ஏக்கர் நிலம் உள்ளது. 133 பிளாட்கள், 108 கடைகள், மதுரை எழுகடல் வணிக வளாகம் உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளன. செல்லுாரில் 8.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறி ஆவணங்களை தாக்கல் செய்தது.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரியது.
மனுதாரர்: பொற்றாமரைக்குளம் அருகே கழிவுநீர் தேங்குகிறது. கோயில் அமைந்துள்ள இடம் கோயில் புறம்போக்கு என ஆவணங்களில் உள்ளது. கோயில் பெயரில் பட்டா வழங்க நடவடிக்கை இல்லை என்றார்.
நீதிபதிகள்: 'அறநிலையத்துறை தரப்பில் நாளை (நவ.28) பதில் மனு செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.

