போலீசார் - வக்கீல்கள் மோதல் சம்பவம் 32 பேர் மீதான வழக்குகள் ரத்து
போலீசார் - வக்கீல்கள் மோதல் சம்பவம் 32 பேர் மீதான வழக்குகள் ரத்து
ADDED : நவ 28, 2025 06:46 AM

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், 2009ல் நடந்த போலீசார் - வழக்கறிஞர்கள் மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ல், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி மீது, வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர்.
அதில் தொடர்புடைய வழக்கறிஞர்களை கைது செய்தபோது, போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது.
கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்த கலவரத்தில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என, பலர் தாக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி, காவல் நிலையமும் தீவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., கடந்த 2010ல், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
தற்போது, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உட்பட, 28 வழக்கறிஞர்களும், நான்கு போலீஸ் அதிகாரிகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை, நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கடந்த ஏப்ரலில் இந்த மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தார்.
வழக்கு விசாரணையின்போது, 'நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தின் அனைத்து நிகழ்வுகளையும், நானும் ஒரு வழக்கறிஞராக இருந்து நேரில் பார்த்தேன்' என, நீதிபதி குறிப்பிட்டுஇருந்தார்.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி எம்.நிர்மல்குமார், மனுதாரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 'நடந்த சம்பவத்தை மறந்து, கடந்து செல்வோம்' எனவும் நீதிபதி தெரிவித்தார்.

