ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆபத்து: புதிய தமிழகம் தலைவர் கருத்து
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆபத்து: புதிய தமிழகம் தலைவர் கருத்து
ADDED : மே 02, 2025 07:01 AM
துாத்துக்குடி : புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி:
வரும் 2026 சட்டசபை தேர்தல் பணியை துவங்கிவிட்டோம். கூட்டணி ஆட்சி என்ற கொள்கையை நோக்கி நகர்ந்து வருகிறோம். 2026ல் அமையும் ஆட்சியில் அனைத்து சமுதாய மக்களின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். கூட்டணியில் இடம்பெற்றவர்கள் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கொள்கை சார்ந்த விஷயத்தை முன் வைத்து, வரும் 30ல் நாங்கள் மாநாடு நடத்துகிறோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு மீது கொள்கை ரீதியாக எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு, சில அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்காக நடக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தில் முடியப் போகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள ஆபத்தை பா.ஜ., உணரவில்லை. இது பா.ஜ., கொள்கையும் அல்ல. ஆனால், திடீர் அறிவிப்பு வருகிறது. மிக, மிக பிற்போக்குத்தனமான நடவடிக்கையாக நான் கருதுகின்றேன். ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் என்ன என்பதை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

