ADDED : அக் 19, 2025 02:06 AM

திருநெல்வேலி: ''அரசு நிர்வாகத்தில், கீழே தலையாரியில் இருந்து மேலே கலெக்டர் வரை ஜாதிய பாகுபாடு பார்க்கும் மனநிலை நிலவுகிறது,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:
எங்கள் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு, 2026 ஜன., 7ல் மதுரையில் நடக்கிறது. இதை முன்னிட்டு, தென் தமிழக கிராமங்களில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை அறிய சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.
திருநெல்வேலி மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களைச் சந்தித்தேன். தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை.
பல இடங்களில் மாதத்தில் ஒருமுறை மட்டுமே குழாய்களில் குடிநீர் வருகிறது; பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லை. சில பகுதிகளில் மயானத்திற்கு கூட 4 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது.
பெரும்பாலான குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா இல்லை. இதனால், அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியவில்லை. மாநில அரசால் நிறைவேற்றப்படும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் கொடுக்கப்பட்ட குழாய்களில் தண்ணீருக்குப் பதிலாக காற்று தான் வருகிறது. சில தெருக்கள் மண் சாலைகளாகவே விடப்பட்டுள்ளன.
ஊராட்சி முதல் மாநகராட்சி வரை, அதிகாரிகள் ஜாதிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். நிதி ஒதுக்கீட்டிலும் கடுமையான பாகுபாடு உள்ளது. சுத்தமல்லி, தருவை பகுதிகளில் ஜாதி மோதலை காரணம் காட்டி பஸ் போக்குவரத்தும் முறையாக இல்லை.
கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை மனுக்கள் வாங்குவது வெறும் சடங்காக மாறிவிட்டது. கலெக்டர் நேரடியாக கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதிகாரிகள், உண் மையை மறைத்து எல்லாம் நன்றாக இருப்பதாக முதல்வரிடம் கூறி ஏமாற்றுகின்றனர். பாகுபாடு காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, தேவைப்பட்டால் கைதும் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.