டீக்கடை பெஞ்ச்: ஆளுங்கட்சி புள்ளியின் ஜாதிய பாகுபாடு!
டீக்கடை பெஞ்ச்: ஆளுங்கட்சி புள்ளியின் ஜாதிய பாகுபாடு!
ADDED : பிப் 05, 2024 12:45 AM

''போலீசார் மீது நம்பிக்கை இல்லைன்னு புகார் கொடுத்திருக்காங்க பா...'' என, முதல் ஆளாக அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ராஜிவ் கொலை வழக்குல முக்கிய சாட்சியா இருந்து, சர்வதேச பயங்கரவாதி களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, தமிழக போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும், ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி அனுசுயாவை தான் சொல்றேன் பா...
''அதாவது, அவங்க ஓய்வுபெற்ற அதிகாரி என்பதால், அவங்களுக்கு பாதுகாப்பு போலீசார், சரியா மரியாதை தர மாட்டேங்கிறாங்க... அதுவும் இல்லாம, அவரது பாதுகாப்புக்கு இருக்கிற போலீசாரை அடிக்கடி மாத்தி, புதுப்புது ஆட்களை நியமிக்கிறாங்க பா...
''இதனால, தனது பாதுகாப்பு பணிக்கு நிரந்தர போலீசாரை நியமிக்கணும் என்ற கோரிக்கை மனுவை, முதல்வர், தலைமை செயலர், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு அனுசுயா தரப்பு அனுப்பியிருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆபீஸ்லயே மப்புல மிதக்கிறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டபாடி கிராம அதிகாரியா இருக்கிறவர், முன்னாள் ராணுவ வீரர்... அந்த கோட்டாவுல தான், அந்த வேலைக்கே வந்தாருங்க...
''பெரும்பாலும் ஆபீஸ் பக்கமே வராதவர், தப்பி தவறி வந்தாலும், 'மிலிட்டரி சரக்கை' அடிச்சிட்டு, மப்பும், மந்தாரமுமா இருக்காருங்க... பொதுமக்கள் எந்த கோரிக்கையா போனாலும், ஒருமையில பேசி விரட்டி அடிக்கிறாருங்க...
''காசு இல்லாம இவரிடம் எந்த காரியமும் நடக்காதுங்க... இவர் எப்பவும் போதையிலயே மிதக்கிறதால, இவரது பணிகளை தற்காலிக ஊழியரான தலையாரி தான் பார்க்கிறாருங்க... 'கலெக்டரிடமே கம்ளைன்ட் செஞ்சாலும், என்னை ஒண்ணும் பண்ண முடியாது... நான் எக்ஸ் ஆர்மி'ன்னு மிரட்டுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆறுமுகம், இந்த பேப்பரை அங்க வையும்...'' என்ற குப்பண்ணாவே, ''ஜாதி பேதம் பார்க்காத கட்சிங்கறது எல்லாம் சுத்த பேத்தல் ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''கோவையில இருக்கற ஆளுங்கட்சி மாவட்ட புள்ளி ஒருத்தர், வேற கட்சியில இருந்து வந்தவர்... குறுகிய காலத்துலயே மாவட்ட அளவுல பதவி வாங்கிட்டார் ஓய்...
''அவரது பெயருக்கு முன்னாடி, கட்சி தலைவருக்கு போடற அடைமொழியை வேற போட்டுக்கறார்... பயங்கரமான ஜாதி பாசம் கொண்ட இவர், தன் சமுதாயத்தை சேர்ந்தவாளை மட்டும் மதிக்கறார் ஓய்...
''மத்த சமுதாயத்தினரை, குறிப்பா, கட்சியில இருக்கற பட்டியல் சமுதாயத்தினரை மதிக்கறதே இல்ல... சேலத்துல நடந்த இளைஞர் அணி மாநாட்டுல, இவர் உட்கார்ந்திருந்த பகுதிக்கு பக்கத்துல, பட்டியல் சமுதாய நிர்வாகி ஒருத்தர், ஸ்பெஷல் பாஸ் வாங்கி உட்கார்ந்துட்டார் ஓய்...
''இதை பார்த்து கடுப்பானவர், அன்னைக்கு ராத்திரியே அந்த நிர்வாகிக்கு போனை போட்டு, திட்டியிருக்கார்... இதுல அவருக்கு, பி.பி., எகிறி உடம்புக்கு முடியாம போயிடுத்து ஓய்...
''இப்படிப்பட்டவர், எதிர்க்கட்சியில இருக்கற தன் சமுதாய எம்.எல்.ஏ., உட்பட பலரிடமும் கொஞ்சி குலாவிண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''முருகேசனை பார்த்து பயந்து போய், ரமேஷ் கிளம்பிட்டாரு பாருங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

