கொல்லப்படும் கால்நடைக்கு இனி இரண்டு நாளில் இழப்பீடு
கொல்லப்படும் கால்நடைக்கு இனி இரண்டு நாளில் இழப்பீடு
ADDED : பிப் 08, 2025 01:07 AM
திருப்பூர்:தெருநாய்களால் கடிபட்டு இறக்கும் கால்நடைகளுக்கு, இரண்டு நாட்களில் இழப்பீடு கிடைக்க உள்ளதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது தொடர்கிறது. நேற்று முன்தினம், மூலனுார் பட்டத்திபாளையத்தில், 27 ஆடுகள் நாய்க்கடிக்கு பலியாகின. அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் இறந்த ஆடுகளுடன், மூலனுார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார், உள்ளாட்சி, கால்நடை மற்றும் வருவாய்த் துறையினர் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கோரப்பட்டது.
தாராபுரம் தாசில்தார், விவசாய அமைப்பினருக்கு அனுப்பிய கடிதத்தில், 'இறந்த ஆடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக முன்மொழிவுகள் அனுப்பி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, இழப்பீடு வழங்கும் அரசாணையை இரு நாட்களுக்குள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிடப்படும் நிலையில், இது ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பொருந்தும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.