ADDED : ஏப் 01, 2025 05:31 AM

நாமக்கல் : 'காவிரி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால், நீரோட்டம் தடைபட்டுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் உருவாகும் காவிரி ஆறு, தமிழகத்தில், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தற்போது, காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், ஆங்காங்கே சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, ஆற்றின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.
சீமை கருவேல மரம் ஆற்றில் உள்ள சொற்ப தண்ணீரையும் உறிஞ்சிக்கொள்வதுடன், ஆற்றின் நீரோட்டத்தையும் தடுத்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
காவிரி ஆற்றில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், மக்களின் குடிநீர் தேவைக்கும், விளை நிலங்களின் பாசனத்துக்கும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றாவிட்டால், நிலத்தடி நீர் முழுதும் உறிஞ்சி, வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
அதற்கு முன், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.