சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
ADDED : ஏப் 16, 2025 12:35 PM

சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவரது வீட்டில் 3 மணி நேரத்திற்கு மேல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
அண்மையில் சென்னையில் உள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்த 50 பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியது. வீட்டுக்குள் மனித கழிவு கலந்த சாக்கடை நீரை ஊற்றி அட்டகாசம் செய்தது. அந்த கும்பல், வீட்டில் இருந்த சங்கரின் தாயாரையும் மிரட்டி விட்டு சென்றது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு தமிழக போலீஸ் டிஜிபி உத்தரவிட்டார்.
சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு அன்றே ஜாமினில் விடுவிக்கப்படவில்லை. எனினும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும், சம்பவத்தின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருப்பதாகவும், சவுக்கு சங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 16) சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவரது வீட்டில் 3 மணி நேரத்திற்கு மேல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.