நீதிபதியிடம் சிக்கிய போலி நீதிபதி; மதுரையில் கைது செய்தது சி.பி.ஐ.
நீதிபதியிடம் சிக்கிய போலி நீதிபதி; மதுரையில் கைது செய்தது சி.பி.ஐ.
UPDATED : பிப் 10, 2024 02:08 AM
ADDED : பிப் 10, 2024 02:07 AM

மதுரை: மதுரையில் நீதிபதி என்று கூறி மோசடி செய்ய முயன்றவரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி உத்தரவுப்படி சி.பி.ஐ., கைது செய்தது.
மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர் பாண்டியன் 51. இவருக்கு ராமநாதபுரத்தில் 'தாட்கோ' சார்பில் தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தை 'தாட்கோ' ரத்து செய்தது. இதை எதிர்த்து 2010ல் பாண்டியன் 'ரிட்' மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் மீண்டும் இடம் வழங்க உத்தரவிட்டது. இதைதொடர்ந்து இடத்திற்கு ரூ.11 லட்சம் செலுத்துமாறு பாண்டியனுக்கு 'தாட்கோ' உத்தரவிட்டது.
ஆரம்பத்தில் ரூ.1.5 லட்சத்திற்கு இடம் கொடுத்த 'தாட்கோ' தற்போது அதே இடத்திற்கு ரூ.11 லட்சம் கேட்டதால் 'தனக்கு சண்டிகர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பயிற்சி பெற கடிதம் வந்துள்ளது.
எனவே அதன் அடிப்படையிலாவது தொகையை குறைக்க வேண்டும்' என 'தாட்கோ' வுக்கு பாண்டியன் கடிதம் எழுதினார்.
இதுதொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி புகழேந்தி, 'இவ்வழக்கை இன்னும் இவ்வளவு நாள் நடத்தி வருகிறீர்கள். சமரசம் செய்து கொள்ளலாமே' என கேட்டார்.
அதற்கு 'தாட்கோ' வழக்கறிஞர், 'பாண்டியன் தன்னை நீதிபதி எனக்கூறி மிரட்டுகிறார்' எனக்கூற, அதிர்ச்சியடைந்த நீதிபதி புகழேந்தி உண்மை தன்மை அறிய சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார்.
டி.எஸ்.பி., தண்டபாணி தலைமையிலான அதிகாரிகள் பாண்டியனிடம் விசாரித்தனர். அவர் பெங்களூருவில் எல்.எல்.பி., சட்டப்படிப்பை முடித்து சண்டிகரில் பயிற்சி பெற்று வருவது தெரிந்தது.
நீதிபதி பயிற்சி பெறுவது குறித்த கடிதத்தின் உண்மை தன்மையை அறிய சண்டிகர் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பாண்டியன் தெரிவித்தார். எனினும் நீதிபதி எனக்கூறி மோசடி செய்ய முயன்றதாக அவரை நேற்றிரவு சி.பி.ஐ., கைது செய்தது.