மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிப்பில் சி.பி.ஐ.,
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிப்பில் சி.பி.ஐ.,
ADDED : ஜூலை 30, 2025 12:29 AM
திருப்புவனம்; மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஜூன் 28ல் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் ஜூலை 12 முதல் சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான குழு விசாரணை செய்து வருகிறது.
இதுவரை அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், நண்பர் வினோத், சக ஊழியர் பிரவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண் உள்ளிட்ட 23 சாட்சிகளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மடப்புரம் கோசாலையில் கிடந்த அஜித்குமாரின் செருப்பு, திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் அவரை சட்டையின்றி போலீசார் அமர வைத்திருந்தது குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர். திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட எட்டு இடங்களில் சி.சி.டி.வி., பதிவுகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் சாட்சிகளிடம் விசாரித்து பதிவு செய்துள்ளனர்.
அனைத்து ஆவணங்களிலும் அஜித்குமார் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து போலீசாரின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில் காவல் நீட்டிப்புக்கு சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.