ஓ.பி., அடிக்கும் டாக்டர், நர்ஸ்களை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'சிசிடிவி கேமரா'
ஓ.பி., அடிக்கும் டாக்டர், நர்ஸ்களை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'சிசிடிவி கேமரா'
ADDED : நவ 19, 2024 03:47 AM

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள், நர்ஸ்கள் ஓ.பி., அடிப்பதை தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், மருத்துவமனை மற்றும் டாக்டர் அறை நுழைவு வாயில்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் டாக்டர்களுக்கு, காலை, 8:00 முதல் மாலை 4:00 மணி வரை பணி நேரம். அத்துடன், 'கால் டியூட்டி' என்ற அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும் பணிக்கு வருவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், டாக்டர்களுக்கான பணி நேரம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை இருந்தது.
அதை விட, கூடுதலாக ஒரு மணி நேரம் பணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டதற்கு, அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. அவ்வாறு வந்தாலும், விரைவாக சென்று விடுகின்றனர்.
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு, 4 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே பணிபுரிகின்றனர். பெரும்பாலான நேரங்களில், நர்ஸ்கள் தான் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மாத்திரைகள் வழங்குகின்றனர். பிரசவத்தின் போது கூட சில இடங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை.
பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே, அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அப்படி இருந்தும், அவர்கள் முறையாக பணிக்கு வரவில்லை என்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து, பொது சுகாதாரத்துறைக்கு, அதிக அளவில் புகார்கள் வந்தபடி உள்ளன. சில இடங்களில், துறையின் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வுக்கு சென்ற போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மட்டுமே, பணியில் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள், நர்ஸ்கள் ஓ.பி., அடிப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலபடுத்தவும், மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் அறை நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
விரைவில் செயல்படும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 4,000க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி கேமரா'க்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் கேமரா பதிவுகளையும், சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, நேரடியாக கண்காணிக்க முடியும். அத்துடன், அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலகங்களிலும், நேரடியாக கண்காணிக்கும் வகையில், அவை பொருத்தப்பட உள்ளன. இந்த கேமராக்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
- செல்வவிநாயகம்
இயக்குனர், பொது சுகாதாரத்துறை.