'போர் நிறுத்தம்' தமிழக போலீஸ், போக்குவரத்து துறைகள்: கான்ஸ்டபிள்-கண்டக்டர் கட்டிப்பிடி ஷோ
'போர் நிறுத்தம்' தமிழக போலீஸ், போக்குவரத்து துறைகள்: கான்ஸ்டபிள்-கண்டக்டர் கட்டிப்பிடி ஷோ
ADDED : மே 25, 2024 09:49 PM
சென்னை: தமிழக போலீசுக்கும், போக்குவரத்து துறைக்கும் இடையே நடந்துவந்த பகிரங்க போர் நிறுத்தப்பட்டது. மோதலுக்கு விதை போட்ட கான்ஸ்டபிளும், கண்டக்டரும் கட்டிப்பிடி ேஷா நடத்தி, சிங்கிள் டீ குடித்து, போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.
அரசு பஸ்களில், சீருடையில் ஏறும் போலீஸ்காரர்கள் அநேகமாக டிக்கெட் எடுப்பதில்லை. அரசு பஸ் கண்டக்டர்களும் அநேகமாக கண்டுகொள்வது இல்லை.
புதிதாக பணிக்கு வந்த போலீஸ் ஆர்வக் கோளாறில் சில நேரம் 'வாரன்ட்' சீட்டை காட்டுவது உண்டு. கண்டக்டரும் அதை வாங்கி குறித்துக் கொள்வது உண்டு. முன்னது சகஜம், பின்னது அபூர்வம்.
சந்திராஷ்டமம்
காக்கிக்கும் காக்கிக்கும் நீண்டகாலமாக இருந்துவந்த இணக்கம் மீது யார் கண் பட்டதோ, தெரியாது. அல்லது, நாகர்கோவிலில் இருந்து துாத்துக்குடி சென்ற பஸ்சில் ஏறிய கான்ஸ்டபிள் ஆறுமுகபாண்டியின் ராசிபலனில் மே 21 சந்திராஷ்டமம் என்று போட்டிருந்ததோ, அதுவும் தெரியாது.
டூட்டியில் இருந்த கண்டக்டர் சகாயராஜ் டிக்கெட் கேட்க, யூனிபார்மில் இருந்த ஆறுமுகபாண்டி முறைக்க, பற்றிக் கொண்டது பயர். அதையடுத்து நடந்த வாக்குவாதம் நாடே பார்த்த வீடியோ. பரமசிவனுக்கும் நக்கீரனுக்கும் நடந்ததை காட்டிலும் காரம் கொஞ்சம் துாக்கல். யார் குற்றவாளி என்று தீர்ப்பெழுத தமிழகமே வாட்ஸாப் யுனிவர்சிட்டிக்கு படையெடுத்தது.
கண்டக்டருக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவமானம் இது.. என்று முதல் சுற்று வாதம் முடிந்ததும், அவருக்காக போக்குவரத்து துறை களம் இறங்கியது.
'போலீஸ் கையில் வாரன்ட் இருந்தால் மட்டுமே டிக்கெட் வாங்காமல் போகலாம்' என அறிவித்தது. போலீஸ் துறையில் உஷ்ணம் எகிறியது.
'கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை அரசு பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்' என, என்றோ முதல்வர் சொன்னதை சுட்டிக்காட்டி வாதாடியது போலீஸ் தரப்பு. 'அதெல்லாம் செயல்பாட்டுக்கே வராத விஷயம்' என, போக்குவரத்து ஊழியர்கள் ஆதாரத்தை வீச, விவகாரம் சூடு பிடித்தது.
அப்படி ஒரு அரசாணை வெளியாகி இருந்தால், உங்கள் டிஜிபி சர்குலர் அனுப்பி இருப்பாரே.., அதை காட்டுங்கள் என போக்குவரத்து கேட்க, அதற்கு பதிலடி தர முடியாத போலீஸ், தங்களுக்கு தெரிந்த ஒரே அதிரடியில் இறங்கியது. 'போடு கேச.. தீட்டு பைன' என்ற வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது எவர் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், தமிழகம் முழுவதும் வதந்தி வேகத்தில் பரவியது உத்தரவு.
'சிக்னலில் நிற்காத பஸ்களை விடாதீங்க; ஸ்டாப்ல நிறுத்தாத டிரைவரை பிடிங்க; பயணியரை மதிக்காத கண்டக்டரை கார்னர் பண்ணுங்க' என அந்தந்த வட்டார அதிகாரியிடம் இருந்து போக்குவரத்து போலீசுக்கு வாய்மொழி உத்தரவுகள் பறந்தன.
அப்புறம் நடந்ததெல்லாம் பரபரப்பு காட்சிகள். ஒரு அரசு பஸ்சை விடாமல் துரத்தியது டிராபிக் போலீஸ். காலம் காலமாக கண்டும் காணாமல் விட்ட வீதிமீறல்கள் எல்லாம் போலீஸ் கண்ணுக்கு 'பளிச்'சென புலப்பட்டன. அதுக்கு பைன், இதுக்கு பைன் என, டிரைவர் கண்டக்டருக்கு நோட்டீஸ் விநியோகம் நடந்தது.
வீதிமீறல்கள்
அரசின் இரு துறைகள் இப்படி பகிரங்கமாக பலப்பரீட்சையில் இறங்கியது மாநிலம் முழுதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
மனசுக்குள் என்ன நினைத்தார்களோ தெரியாது, வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தார்கள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள். காக்கிகள் சண்டையை ரசிக்கிறாரா முதல்வர் என்கிற ரேஞ்சுக்கு அரசையும் விமர்சித்தனர்.
பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்ததால், தலைமை செயலர் தலையிட உத்தரவிட்டார் முதல்வர். போலீஸ், போக்குவரத்து துறைகளின் தலைவர்களுக்கு தகவல் பறந்தது. போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டியை கோட்டையில் அழைத்து பேசினார் உள்துறை செயலர் அமுதா.
'போட்டோ ஷூட்'
போர் நிறுத்த உடன்படிக்கை தயாரானது. வெளியிட முடியாதே. எனவே, ஒரு 'போட்டோ ஷூட்' ஏற்பாடு ஆனது. மோதலுக்கு அச்சாரமிட்ட கான்ஸ்டபிளும் கண்டக்டரும் வரவழைக்கப்பட்டனர்.
எழுதிக் கொடுத்த வசனத்தை இருவரும் மனப்பாடம் செய்ததும், ஸ்டார்ட் சொல்லி ஷூட் முடித்தனர். இருவரும் கட்டிப்பிடிக்கும் காட்சி கிளைமாக்ஸ்.
'நாம் இருவரும் பொதுத்துறையில் வேலை செய்கிறோம். நீங்கள் உங்கள் கருத்தை கூற, நான் என் கருத்தை கூறினேன். அப்புறம் நீங்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்தீர்கள். இது விவகாரமாக பரவி பிரச்னை ஏற்பட்டதற்கு, நான் வருத்தம் தெரிவிக்கிறேன்' என்றார், கண்டக்டர் சகாயராஜ்.
ஆறுமுகபாண்டியும் கண் கலங்க, 'நானும் வருத்தம் தெரிவிக்கிறேன். இனிமேல் இதுபோல் இல்லாமல், நாம் நண்பர்களாக பணிபுரிவோம்' எனக் கூறி, அவரை கட்டிப்பிடித்துக் கொண்டார். பின்னர், இருவரும் தேநீர் அருந்தியபடி பேசும் காட்சியுடன், 'சுபம்' என 'எண்டு கார்டு' போடப்பட்டது.
அந்த வீடியோ, உடனடியாக அனைத்து 'டிவி'க்களுக்கும் 'ரிலீஸ்' செய்யப்பட்டது.
போலீசுக்கு அரசு பஸ்சில் இலவசம் உண்டா இல்லையா என்று எந்த அறிவிப்பும் இல்லாமலே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. வழக்கம் போல, வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்பட்டதை மட்டும் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.