ஓடிடிக்கு சென்சார் : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி
ஓடிடிக்கு சென்சார் : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி
UPDATED : நவ 09, 2024 10:33 PM
ADDED : நவ 09, 2024 10:15 PM

சென்னை: புதிய ஒளிபரப்பு கொள்கை மூலம் ஓடிடிக்கு சென்சார் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சினிமா படங்களை தணிக்கை செய்வதற்கு என்று சென்சார் போர்டு உள்ளது. இங்கு தணிக்கை செய்யப்பட்ட பிறகே, அனைத்து படங்களும் 'ஏ', 'யு', 'யு/ஏ' என்ற சான்றிதழ்களுடன் திரைப்படங்கள் வெளியாகும். தணிக்கையின் போது அதிக வன்முறை, ஆபாசக்காட்சிகள் போன்றவை நீக்கப்படும்.
தற்போது ஆன்லைன் வழியாக செயல்படும் ஓ.டி.டி., தளம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. மாதந்தோறும் கட்டணம் செலுத்தி திரைப்படங்கள், சீரியல்களை பார்க்க முடியும். மேலும் ஓடிடிக்கு என பிரத்யேகமாக படங்கள், சீரியல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் இளைஞர்களை கவர்வதற்காக ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால், ஓடிடிக்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தன.
இந்நிலையில், சென்னையில் நிருபர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது: புதிய ஒளிபரப்புக் கொள்கை மூலம் ஓடிடிக்கு சென்சார் கொண்டு வரப்படும். கோவாவில் 8 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது.அமரன் போன்ற நல்ல படங்களை வரவேற்பது நாட்டின் மீது நாம் வைத்துள்ள மரியாதை. காஷ்மீரில் நடந்த உண்மை சம்பவத்தையே அமரன் படத்தில் காட்டி உள்ளனர். நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவை இன்று அதிகரித்து உள்ளது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.