மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு: போராட்டம் நடத்த முடிவு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு: போராட்டம் நடத்த முடிவு
UPDATED : நவ 27, 2026 07:12 PM
ADDED : நவ 27, 2026 07:12 PM
மதுரை: ‘மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில், தலைமையாசிரியர்களை ஈடுபடுத்த கூடாது’ என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேசிய அளவில், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகள் கணக்கெடுப்பு பணி ஜூலையில் முடிந்தது. இதில் ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து வீடுகள் வாரியாக, தனிநபர் விபரங்கள் சேகரிப்பு உள்ளிட்ட இரண்டாம் கட்ட பணிகள் வரும் பிப்ரவரி, மார்ச்சில் தொடங்க உள்ளது.
இதுதொடர்பான பயிற்சி வகுப்பில் பங்கேற்க மதுரையில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கழக மாவட்ட தலைவர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:
இப்பணியில் ஆசிரியர்களை பெருமளவில் ஈடுபடுத்துவதை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளியை நிர்வகிக்கும் தலைமையாசிரியர்களையும் களப்பணிக்கு வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது ஆச்சரியப்பட வைக்கிறது.
இதுபோன்ற உத்தரவு வேறு மாவட்டங்களில் பிறப்பிக்கப்படவில்லை. மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் பணியிலும் கூட ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்கின்றனர். பள்ளிகளுக்கு பொறுப்பு வகிக்கும் தலைமையாசிரியர்களையும் பணிக்கு அனுப்பினால் பள்ளிகளின் நிலை என்னவாகும். இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
