திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய விதிமுறைகள் அக்., 1ல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு
திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய விதிமுறைகள் அக்., 1ல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு
UPDATED : ஏப் 07, 2025 11:19 AM
ADDED : ஏப் 06, 2025 11:28 PM

சென்னை: திடக்கழிவு மேலாண்மைக்காக, 2016ல் வெளியிடப்பட்ட விதிகளை மேம்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை, அக்., 1ல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும் நகர்ப்புற வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், திடக்கழிவு மேலாண்மை பெரிய சவாலாக உள்ளது. நகரங்களில் உருவாகும் திடக்கழிவு, அருகில் உள்ள காலியான நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றில் கொட்டப்படுகின்றன.
ஒரு கட்டத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலையில், குப்பை ஆங்காங்கே எரிக்கப்படுகிறது. திடக்கழிவுகளில் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை சேர்த்து எரிக்கும்போது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
பல இடங்களில், தொழிற்சாலை, மருத்துவமனை கழிவுகளும் சேருவதால் பாதிப்பு அதிகமாகிறது. இதை கருத்தில் வைத்து, 2016ல் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மத்திய அரசு அறிவித்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றன.
இதன்படி, மாவட்ட அளவில் துணை விதிகள் வகுக்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இந்த விதிகளை அமல்படுத்தி வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக, பல்வேறு புதிய பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில், 2016ல் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை எழுந்தது.
இதை கருத்தில் வைத்து, 'திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2024' வரைவு ஆவணத்தை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தயாரித்தது. இது தொடர்பாக, பொதுமக்கள், அரசு துறைகள், தனியார் அமைப்புகள், வல்லுநர்களிடம் கருத்து கேட்பு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. அதனால், புதிய விதிமுறைகளை, வரும் அக்., 1ல் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இது குறித்து தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திடக்கழிவு மேலாண்மை தொடர்பான புதிய விதிகளில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
'விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், அதை தமிழகத்தில் எப்படி அமல்படுத்தலாம் என்று ஆலோசித்து வருகிறோம்' என்றார்.