'சிமி' அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
'சிமி' அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
ADDED : ஜன 29, 2024 05:27 PM

புதுடில்லி: சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கான (சிமி) தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
'சிமி' எனப்படும், இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, 1977ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு, பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டதை அடுத்து, 2001ல், மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.அப்போது முதலே, இந்த அமைப்பு மீதான தடை, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, 2014ல், ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த தடை உத்தரவு, நாளை மறுநாளுடன் (ஜனவரி 31) முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் சிமி அமைப்புக்கான தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளாத பிரதமர் மோடியின் நோக்கத்தை வலுப்படுத்தும் விதமாக 'இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு (சிமி)' சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 'சட்டவிரோத அமைப்பாக' அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.