கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கு பள்ளிகளில் தடுப்பூசி திட்டம்
கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கு பள்ளிகளில் தடுப்பூசி திட்டம்
ADDED : ஏப் 01, 2025 02:38 AM
சென்னை : தமிழகத்தில், 14 வயதை நிரம்பிய சிறுமியருக்கு, கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியான ஹெச்.பி.வி., செலுத்தும் திட்டத்தை, பள்ளிகள் வாயிலாக செயல்படுத்த, மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையில், ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்துார், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில், 30 வயதை கடந்த அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் கண்டறியும் நபர்களுக்கு, தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.
இதைதொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், ஆண், பெண் என, இரு பாலருக்கும், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை, தமிழகத்தில் தடுக்கும் வகையில், 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' என்ற ஹெச்.பி.வி., தடுப்பூசி, 14 வயதை நிரம்பிய சிறுமியருக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, 36 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிக்கு, வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
தற்போது, 14 வயதை நிரம்பிய சிறுமியர் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம், எந்த வயதில் இருந்து செலுத்தினால் சரியாக இருக்கும்; எவ்வளவு 'டோஸ்' தடுப்பூசி போட வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் ஆராயப்படுகின்றன.
இந்த தடுப்பூசி திட்டத்தை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள், பொது இடங்களில் செயல்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள், ஓரிரு மாதங்களில் முடிவடையும். அதன் பின்னரே, இந்த தடுப்பூசியால் ஏற்படும் பலன்கள் குறித்து, பொது மக்களுக்கு சொல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.