விளையாட்டு ஆணைய விடுதி மாணவர்களுக்கு 'சாம்பியன்ஸ் கிட்'
விளையாட்டு ஆணைய விடுதி மாணவர்களுக்கு 'சாம்பியன்ஸ் கிட்'
ADDED : நவ 12, 2024 02:05 AM

சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு, 'சாம்பியன்ஸ் கிட்' என்ற, விளையாட்டு உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 15 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு வளாகம், மதுரையில் ஆறு கோடி ரூபாய் செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்ட, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அவர் அடிக்கல் நாட்டினார். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும், 553 விளையாட்டு வீரர், வீராங்கனையருக்கு, 'சாம்பியன்ஸ் கிட்' என்ற, விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
படிப்புடன் தலைசிறந்த வீரர், வீராங்கனையரை உருவாக்கும் களமாக, விளையாட்டு விடுதிகள் உள்ளதால், தமிழகத்தில் நடக்கும் தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளை, அவர்கள் நேரில் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். நீங்கள் விளையாட்டில், எதைச் சாதிக்க நினைத்தாலும், பொருளாதார தடையை எண்ணி தயங்க வேண்டாம். உங்களுக்கு உதவத்தான், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ்' அறக்கட்டளை உள்ளது.
இதுவரை, அறக்கட்டளை வாயிலாக, 14 கோடி ரூபாய் அளவுக்கு, 600க்கும் மேற்பட்டோருக்கு உதவியுள்ளோம். அதை பயன்படுத்தி, தமிழகத்தை நாட்டின் விளையாட்டு தலைநகராக்கும் வகையில், வீரர், வீராங்கனையர் விளையாட்டில் சிறக்க வேண்டும். ஒவ்வொருவரும் பெறும் வெற்றி, மாநிலத்துக்கானது, நாட்டுக்கானது.
இவ்வாறு அவர் பேசினார்.