UPDATED : மே 26, 2024 02:35 PM
ADDED : மே 26, 2024 02:12 PM

சென்னை: 'மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள, 'ரேமல்' புயல், இன்று நள்ளிரவு வங்கதேசம் கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும் இடையே, கரையை கடக்கக் கூடும். தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று காலை (மே 25) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று மாலை புயலாக வலுப்பெற்று, இன்று (மே 26) தீவிர புயலாக வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இன்று நள்ளிரவில் கரையை கடக்கும்
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள, 'ரேமல்' புயல், இன்று நள்ளிரவு வங்கதேசம் கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும் இடையே, கரையை கடக்கக் கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை:
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று(மே 26) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.